சென்னை: மது அருந்த பணம் தராத ஆத்திரத்தில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரை பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரியகாவனம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சோலையப்பன் (60). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது உறவினர் யுகேந்திரன் (25). கடந்த 28ம் தேதி பெரியகாவனம் பேருந்து நிறுத்தத்தில் சோலையப்பன் நின்றிருந்தார். அப்போது, மது போதையில் அங்கு வந்த யுகேந்திரன், மேலும் மது அருந்த சோலையப்பனிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால், தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த யுகேந்திரன், தனது கையில் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து சோலையப்பன் தலையில் அடித்துள்ளார்.
இதில், தலையில் படுகாயமடைந்த சோலையப்பன், ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சோலையப்பன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பொன்னேரி போலீசார், அடிதடி வழக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். பின்னர், யுகேந்திரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பீர் பாட்டிலால் அடித்து ரயில்வே ஊழியர் கொலை